கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவைப் பொறுத்தவரை 794 பேர் பாதிக்கப்பட்டதில், 275 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மீதமுள்ள அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா வைரஸை எதிர்கொள்வதில் கேரள மாநிலம், இந்தியாவுக்கு மிகச்சிறந்த வழிக்காட்டுதல்களை வழங்கியுள்ளன.
இந்நிலையில் ட்விட்டர் இந்தியா சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட #AskTheCM என்ற ஹேஸ்டேக் மூலம் சமூகவலைதளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பினராயி விஜயன் பதிலளித்தார்.
அதில் மக்களால் கேட்கப்பட்ட வேலைவாய்ப்பு, வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கான பணிகள், எதிர்காலத்தில் வரவுள்ள பருவமழையை எதிர்கொள்வதற்கான திட்டம், பருவநிலை மாற்றம், இயற்கை பேரிடர் வந்தால் அதனை எதிர்கொள்ள மாநிலம் தயார் நிலையில் உள்ளதா என்பன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அவர் நிதானமாக பதிலளித்தார்.
அதில், ''கரோனா வைரஸை எதிர்கொள்ள புதிய வழிகளைக் கண்டறிந்த கேரளாவில், இனி எந்த நெருக்கடி நிலை ஏற்பட்டாலும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது கரோனாவால் பாதிக்கப்படும் பெரும்பாலானோர், கேரளாவுக்கு வெளியேதான் இருக்கின்றனர். அவர்களை நாங்கள் என்றுமே அந்நியராக பார்க்க மாட்டோம். இந்த நிலம் அவர்களுக்கும் சொந்தமானதுதான்'' என்றார்.
இதையும் படிங்க: ஒரு லட்சம் கோடி வேண்டும் - மத்திய அரசுக்கு மம்தா வலியுறுத்தல்