கோவிட்-19 பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் முடங்கியுள்ளதால் நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியில் உ.பி., குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் தொழிலாளர் சட்டங்களில் சில அடிப்படைத் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளன.
இந்நிலையில், இதனை எதிர்த்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த நன்திரி பிரவீன் என்ற சட்டக்கல்லூரி மாணவி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவர் அளித்துள்ள மனுவில், "தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்திக் கூடுதலாகப் பணி செய்யவைப்பதும், அவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த நலத்திட்ட, சுகாதார உதவிகளை நிறுத்துவதும் அரசியலைப்புச் சட்டம் 14, 15, 19, 21, 23 ஆகிய பிரிவுகளின்கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.
தொழிலாளர்களின் ஆரோக்கியம், சம்பளம், பணிநேரம் ஆகியவற்றை முறைப்படுத்தும் சர்வதேச அமைப்புகளில் இந்தியாவும் உறுப்பு நாடாக உள்ள நிலையில், மாநிலங்கள் கொண்டுவந்துள்ள இந்தத் திருத்தங்கள் சர்வதேச தொழிலாளர் சட்டங்களின் கட்டமைப்புக்கு எதிராக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவில், மத்திய தொழிலாளர் துறை, சட்ட மற்றும் நீதித் துறை, சுகாதாரத் துறை போன்றவைகளும் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் அரசுகளும் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : இந்தியாவில் மீண்டும் தொடங்குகிறது விமான சேவை