கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், மாவேலிக்கரை அருகே வள்ளிகுன்னம் காவல்நிலையத்தில் காவல்துறை அலுவலராகப் பணிபுரிந்தவர் சவுமியா. ஆலுவா பகுதிப் போக்குவரத்துக் காவலராக பணியாற்றியவர் அஜாஸ். இருவரும் திருச்சூர் காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி மேற்கொண்ட போது நண்பர்களாக பழகியுள்ளனர்.
இந்நிலையில் மூன்று குழந்தைகளுக்கு தாயான சவுமியாவை திருமணம் செய்யும் நோக்கத்தில் திருமணமே செய்யாமல் இருந்துள்ளார் அஜாஸ். இதற்கிடையில் சவுமியாவிற்கு அஜாஸ் ரூ. 1.25 லட்சம் கடனாக கொடுத்துள்ளார்.
அந்தப் பணத்தை அவர் திருப்பிக் கொடுத்தபோது, பணத்தை பெற்றுக் கொள்ளாமல் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அஜாஸ் வற்புறுத்தியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்தால், 15ஆம் தேதி பணியை முடித்து விட்டு, இருசக்கர வாகனத்தில் சவுமியா வீட்டிற்கு திரும்பியபோது பின்தொடர்ந்து காரில் வந்த அஜாஸ் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து அஜாஸும் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரிடம் ஆலப்புழா நீதிபதி வாக்குமூலம் பெற்றார். அதில் சவுமியா தன்னை திருமணம் செய்து கொள்ளாததால் ஆத்திரமடைந்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் நேற்று மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.