நாடு முழுக்க புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பரவல் இருந்துவரும் நிலையில் கேரள மாநில நிலவரம் குறித்து அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா கூறுகையில், “நாங்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அதுதான் எங்கள் முயற்சி. கடந்த சில நாள்கள் அறிக்கைகளை பார்க்கும்போது, எங்களது முயற்சிக்கு பலன் கிடைப்பதாக உணர்கிறோம்.
மாநிலத்தில் பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டாலும் முழுவதும் குணமடையவில்லை. கேரளாவில் மட்டும் வைரஸ் கட்டுப்பாட்டில் இருந்தால் போதாது. இது ஒரு தொற்றுநோய். அண்டை மாநிலங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
தமிழ்நாட்டில் இதுவரை 1,075 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 59 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த வைரஸின் தன்மை என்னவென்றால், சில நேரங்களில் மிகக் குறைவான பாதிப்பாக இருக்கும். திடீரென்று ஒரு பாதிக்கப்பட்டவரை கண்டறியத் தவறினால் நோய்த்தொற்று அதிக நபர்களுக்கு பரவிவிடுகிறது.
அதனால் நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இதுதான் நான் உங்களுக்கு கொடுக்க விரும்பும் செய்தி. நேற்று முன்தினம் இரண்டு புதிய பாதிப்புகள் மட்டுமே இருந்தது.
முன்பு கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒன்பதாக இருந்து, அடுத்த நாளில் 24 ஆக உயர்ந்தது. கடுமையான தனிமைப்படுத்தல், நுணுக்கமான சமூகத் தொடர்பு குறித்து அறிதல் மற்றும் தனிமைப்படுத்தும் முறை அனைத்தும் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்க அரசுக்கு உதவியுள்ளன” என்றார்.
கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை கரோனா வைரஸ் பாதிப்புகள் இரண்டாக பதிவாகியுள்ளன. மாநிலத்தில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான காசர்கோட்டில், மொத்தம் 36 பாதிப்பாளர்களில் 28 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது, மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் 194 கோவிட்-19 பெருந்தொற்று நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். 1.16 லட்சம் பேர் கண்காணிப்பில் உள்ளனர். 179 பேர் குணமாகியுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.