கேரள மாநிலத்தைச் சேர்ந்த வரலாற்று பட்டதாரி மனீஷ்; சிறுவயதிலிருந்தே மலைகள் மீது தீராத காதல் கொண்டவர். எவரெஸ்ட் சிகரம் மற்றும் ஆல்ப்ஸ் மலை குறித்து பாடப்புத்தகங்களில் படித்த நாள் முதலே ஏற வேண்டும் என்ற ஆசை தோன்றியுள்ளது. அதற்கான முயற்சியில் களமிறங்க முடிவு செய்தார். 2004ஆம் ஆண்டில் ஒரு வழிகாட்டி தொழிலாளியாக பணிபுரிந்து சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு, டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். அங்கு அடல் பிஹாரி மலையேறுதல் நிறுவனத்தில் மலையேறுதல் குறித்த அடிப்படை படிப்பை முடித்துள்ளார். பின்னர், மணாலியில் 17 ஆயிரத்து 346 அடி உயரமுள்ள மவுண்ட் ஃப்ரெண்ட்ஷிப்பை 20 நாட்களுக்குள் கடந்து சாதனைப் படைத்துள்ளார். இச்சாதனையின்போது 35 பேர் கொண்ட மலையேறுபவர்களின் குழுவிலிருந்த ஒரே தென்னிந்தியர் இவர் ஆவார்.
இந்தச் சாதனைப் பயணத்தின் போது மனீஷூக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மலையேற்றத்தில் உள்ள ஈர்ப்பின் காரணமாக பனி உருகுவதில் கிடைத்த தண்ணீரைக் குடிப்பது, அரிசி உணவுகள் இல்லாத தின்பண்டங்களை மட்டுமே உண்டு உயிர் வாழ்வது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வென்றிருக்கிறார்.
இதுகுறித்து மனீஷ் கூறுகையில், "கனவுகளை நிறைவேற்றுவதில் கிடைத்தது மகிழ்ச்சி. தேடலுக்காக எதிர்கொண்ட அனைத்து சிரமங்களுக்கும் மதிப்புள்ளது. உலகை வென்ற உணர்வு தனக்கு இருக்கிறது. இன்னும் பல மலைகளில் ஏறுவதன் மூலம் உலக சாதனைப் படைப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது" என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
மேலும், அவரின் நீண்ட நாள் கனவான எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்கும் தயாராகி கொண்டிருந்த சமயத்தில், கரோனா தொற்றால் அவரின் சாதனைப் பட்டியல் சிறிது காலம் தள்ளிச்சென்றுள்ளது.