சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸால் உலகம் முழுவதும் உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்தும் மருந்து கண்டறியப்படவில்லை என்பதால், அதனைப் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நோய்த் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து மாநிலங்களும் முடக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டுமே இயங்கும் எனவும், டாஸ்மாக் கடைகள், பார்கள் ஆகியவையும் வருகிற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு குடி மகன்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.
அந்த சோகத்தில் கேரளாவில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சனோஜ் (37). மதுபானக் கடைகள் முடப்பட்டதால் இரண்டு நாள்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று (மார்ச் 27) அவரது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதை மீட்டெடுப்பு மையங்களும், ஆலோசனை வழங்கும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக கேரள கலால் துறை அறிவித்துள்ளது. மேலும், கலால் துறையின் கட்டணமில்லா எண் 14405ஐ அழைப்பதன் மூலமும் இந்தச் சேவையைப் பெறலாம்.
இதையும் படிங்க: 'கரோனா தனிமை' - மன உளைச்சலில் நிர்வாணமாக திரிந்த இளைஞர் கைது!