கேரள மாநிலம் மூணாறு, ராஜமலை அருகேயுள்ள பெட்டிமுடி எனும் இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு சிக்கியதில், சுமார் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஆகஸ்ட் 7ஆம் தேதி) 12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.
40க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில், விபத்தில் சிக்கியவர்களை மீட்க காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர், அப்பகுதி மக்கள் என அனைவரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 8, 9 தேதிகள்) ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிட தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் தென்னிந்திய பொறுப்பாளரான ரேகா நம்பியார், ”பெரும்பாலானோரின் உடல்கள் சேற்றில் சிக்கி இருக்க வாய்ப்புள்ளது. 55 பேர் கொண்ட குழு தேடல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அவர்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ள அனைவரையும் மீட்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய பகுதிகளில் 20 செ.மீக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நான்கு மாதங்களில் நீரில் மூழ்கியும், நிலச்சரிவு, மரம் விழுந்த விபத்துகளாலும் கேரளாவில் இதுவரை மொத்தம் 51 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.