கேரள தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ள மாநில உயர் நீதிமன்றத்தில் 14 வயது சிறுமி ஒருவரின் தந்தை ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “தனது 14 வயது மகளை காணவில்லை, அவளை கண்டுபிடித்துத் தர வேண்டும்” என்று முறையிட்டிருந்தார்.
இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் காவலர்கள் துரிதமாக செயல்பட்டு கர்நாடக மாநிலம் மங்களூருவில் சம்மந்தப்பட்ட 14 வயது சிறுமியை மீட்டனர். இது தொடர்பாக 28 வயதான திருமணமான இளைஞர் ஒருவரும் குற்றம் மற்றும் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தச் சிறுமி கர்ப்பம் தரித்திருந்தாள். எனினும் அந்தக் கர்ப்பத்தை சுமக்கும் அளவுக்கு அவளிடம் உடல் பலமோ, மன தைரியமோ இல்லை.
இது தொடர்பாக மருத்துவர்கள் விரிவான மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அச்சிறுமியின் தந்தையும், தனது மகளின் 24 வார கர்ப்பத்தை கலைக்க உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வேண்டினார்.
இந்நிலையில் மருத்துவர்களின் அறிக்கை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் வருங்கால வாழ்க்கையை கவனத்தில் கொண்டு நீதிபதி 24 வார கருவை கலைக்க உத்தரவிட்டார்.
இந்த நீதிமன்ற அமர்வு காணொலி வாயிலாக நடந்தது.