கேரள மாநில மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், மாநிலத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மேற்கொள்ளப்படும் அனைத்தும் அலுவலகப் பணிகளும் ஆன்-லைன் முறைக்கு மாற்றப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
கோழிக்கோட்டில், அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது விஜயன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள், அனைத்து தரப்பு முக்கிய நபர்கள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய கேரள முதலமைச்சர், "பெரும்பாலான மக்கள் தங்களது தேவைகளுக்காக உள்ளாட்சி அமைப்புகளை அணுகுகின்றனர். ஆகவே, இந்தச் சேவைகள் அனைத்தையும் ஆன்-லைன் சேவையாக மாற்றுவதன்மூலம், பொதுமக்கள் தங்களது தேவைகளை எளிதாகவும், விரைவாக பூர்த்தி செய்துகொள்ள முடியும். மேலும், இதன்மூலம் அரசியல் துறையில் இருக்கும் ஊழலைக் கட்டுப்படுத்த முடியும் " என்றார்.
குடிமக்களுக்குச் சேவைகளை வழங்குவதற்கும், வணிக நிறுவனங்களுடன் தொடர்புகொள்வதற்கும், அரசின் பல்வேறு நிறுவனங்களுக்கிடையில் தகவல் பரிமாற்றம் மற்றும் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் மின்னாளுமை பயன்படுகிறது.
2021ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக 'புதிய கேரளாவை உருவாக்குங்கள்' என்ற முழக்கத்துடன் மக்களின் ஆதரவைத் திரட்ட முதலமைச்சர் அம்மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.