கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துவருகின்றது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. பெய்துவரும் பலத்த மழையால், நீர்மட்டம் 136 அடியை எட்டும் போது முல்லை பெரியாறில் இருந்து சுரங்கப்பாதை வழியாக வைகை அணைக்கு, ஒவ்வொரு கட்டமாக நீரை வெளியேற்றுமாறு கேரள அரசு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, கேரள மாநில தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா எழுதிய கடிதத்தில்," இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால், முல்லை பெரியாறின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி, 116.20 அடியாக இருந்த நீர்மட்டம், ஆகஸ்ட் 7ஆம் தேதி 2 மணியளவில், 131.25 அடியாக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் சனிக்கிழமை(ஆக.8), ஞாயிற்றுக்கிழமை(ஆக.9) ஆகிய இரு நாள்கள் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது அணையின் நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் 257 கன அடியாக உள்ளது. வினாடிக்கு 1,650 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் முல்லைபெரியாறு அணை, தேக்கடி முறையே 19.8 செ.மீ மற்றும் 15.7 செ.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது. அதிக மழை பொழிவால், அணையின் நீர் மட்டம் ஏழு அடி உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியாறு அணையின் உபரி நீரை வெளியேற்றும் மதகுகள்(ஷட்டர்கள்) 1 லட்சத்து 22 ஆயிரம் கனஅடி தண்ணீரை வெளியேற்றும் திறன் கொண்டவை என்று கட்டப்பனாவில் உள்ள சிறுபாசன பிரிவின் செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளதாகவும், கடந்த 2018 ஆம் ஆண்டில் 23 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றும் போது ஏற்பட்ட சேதத்தின் அளவு எங்களுக்குத் தெரியும்.
அவ்வாறு ஒரே கட்டமாக தண்ணீரை வெளியேற்றாமல், ஒவ்வொரு கட்டமாக தண்ணீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அந்தக் கடிததத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே தேனி மாவட்ட ஆட்சியரிடம், இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷன் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். அதில், அவசர கால தேவை ஏற்பட்டால், இடுக்கி மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்ற போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், அணையின் மதகுகளை திறக்கும்போது, அதுகுறித்து அறிவிப்பை முன்னரே தெரிவிக்க வேண்டும் என்றும், குறைந்தப்பட்சம் இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.