கேரள மாநிலத்தின் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற கோவிட்-19 தடுப்பு முன்னெடுப்பு தொடர்பான தினசரி செய்தியாளர் சந்திப்பில் பேசியபோதே இதனை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய பினராயி விஜயன், “உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யவும், வேலைவாய்ப்பை மேம்படுத்தவும் கேரள அரசு முன்னெடுக்கும் முயற்சியின், ஒரு பகுதியாக தொற்றுநோய் பரவல் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் வேளாண்மைத் துறையை புதுப்பிக்க மதிப்பிடப்பட்டுள்ள இந்த 3,000 கோடி ரூபாயில் உள்ளூர் அரசு நிறுவனங்கள் மூலமாகவும், பல்வேறு துறைகளின் திட்ட ஒதுக்கீட்டு மூலமாகவும் 1,500 கோடி ரூபாய் திரட்டப்படும்.
மீதமுள்ள 1,500 கோடி ரூபாய் நபார்டு, கூட்டுறவுத் துறையிலிருந்து கடன்களாக வழங்கப்படும். மாநிலம் முழுவதும் அடுத்த மாதம் முதல் தரிசு நிலத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தும்வகையில் வேளாண்மைத் துறை ஒரு முக்கியமான திட்டத்தை முன்வைத்துள்ளது. அதனை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு செயல்படும். அனைத்து உள்ளூர் அமைப்புகளும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படும்.
கேரளாவில் வேளாண்மையைப் புத்துயிர் பெற வைக்கவும், விவசாயிகளின் வருவாயை அதிகரித்து இளைஞர்களை விவசாயத்திற்கு ஈர்ப்பதும், வெளிநாட்டில் பணி செய்துவந்து தற்போது வேலையிழந்து நாடு திரும்பியவர்களுக்கும் மறுவாழ்வளிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். தற்போது, கேரள மாநில வேளாண்மைத் துறை ஒரு வரைவுத் திட்டத்தைத் தயாரித்துவருகிறது. அது முடிவடைந்ததும், அது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
கால்நடைகள், பால், முட்டை உற்பத்தி, மீன்வளர்ப்பு ஆகியவற்றை அதிகரிப்பதற்கும் இதன்மூலமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் மே 15ஆம் தேதிக்கு முன் ஆண்டுத் திட்டத்தில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். தரிசு நிலத்தின் உரிமையாளர்கள் தமது நிலத்தில் பயிரிட விரும்பினால், அரசாங்கம் உரிமையாளர்களுக்கு உதவும்.
இல்லையெனில், சுய உதவிக்குழுக்கள், குடும்ப ஸ்ரீ, பஞ்சாயத்து தலைமையிலான குழுக்கள் நிலத்தை சாகுபடிக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். வேளாண்மைத் துறையால் ஒருங்கிணைக்கப்படும். இந்தத் திட்டத்தில் கால்நடை பராமரிப்பு, நீர்ப்பாசனம், மீன்வளம், தொழில் சாலைகள், பட்டியலின பழங்குடியின நலவாரியங்கள் போன்ற பல்வேறு துறைகள் ஈடுபடும்” என்றார்.
மாநிலத்தில் 1.09 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் உள்ளன. அதில் 1.4 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் இடை-பயிர்களுக்குப் பயன்படுத்த மதிப்பிடப்பட்டுள்ளது. விவசாயம் பரவி உற்பத்தி அதிகரிக்கும்போது, புதிய விவசாய சந்தைகள் திறக்கப்படும்.
நகரங்களில் சந்தை அமைப்பதன் மூலமாக மட்டுமல்லாது, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் அமைப்புகளையும் உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : ஊசலாடும் முதலமைச்சர் பதவி: மோடியின் உதவியை நாடும் உத்தவ் தாக்கரே!