திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 5ஆம் தேதி ராஜந்திர பொருள்கள் கொண்டுவரப்பட்ட பெட்டிகளிலிருந்து, ரூ. 15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து என்ஐஏ மற்றும் சுங்கத்துறை அலுவலர்கள் நடத்திய விசாரணையில், கேரள முதலமைச்சரின் முதன்மைச் செயலர் சிவசங்கர், ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட சிலரை என்ஐஏ அலுவலர்கள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முன்னதாக, ஜூலை 11ஆம் தேதி பெங்களூருவைச் சேர்ந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்தியது.
அவர்களின் காவல் முடிவடைந்ததையடுத்து, சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சுங்கத் துறையின் மனுவைக் கருத்தில் கொண்டு, கொச்சியில் உள்ள பொருளாதார குற்றங்களுக்கான தலைமை நீதித்துறை நீதிமன்றம் ஆகஸ்ட் 1 வரை ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரின் காவலை நீட்டித்தது. மேலும், பெண் சுங்க அலுவலரின் கண்காணிப்பில் ஸ்வப்னா சுரேஷை வைக்கவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த காவலும் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் இருவரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட இருவருமே கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு எர்ணாகுளம் மாவட்ட சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.