ஜூலை 5ஆம் தேதி நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கேரள தங்கக் கடத்தல் வழக்கில், ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப் நாயர், ஃபாசில் ஃபரீத்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கை தேசியப் புலனாய்வு முகமை விசாரித்துவருகிறது. விசாரணையின் போது, சரித் தான் பத்துமுறை தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், சுங்கத்துறை அலுவலர்கள் ஸ்வப்னாவின் வீட்டில் ஒருநாள் முழுவதும் சோதனை நடத்தி சில ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இந்தச் சூழ்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்கத்துறை அலுவலர்களின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்ட எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஜலால், மலப்புரத்தைச் சேர்ந்த முகமது ஷபி, கொண்டாட்டியைச் சேர்ந்த ஹம்ஜத் அலி ஆகியோர் கடத்தி கொண்டு வரப்படும் தங்கத்தை வியாபாரிகளிடம் விற்பனை செய்பவர்கள் என்பது தெரிய வருகிறது. கைது செய்யப்பட்ட இந்த மூவரும் இன்று பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர்.
இதையும் படிங்க: தங்கக் கடத்தல்: முன்னாள் தலைமைச் செயலரிடம் 9 மணி நேர விசாரணை!