கேரள மாநிலம் பாலக்காடு அருகே அடையாளம் தெரியாத சிலர் பசியுடன் சுற்றித்திரிந்த 15 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி யானை ஒன்றிற்கு அன்னாச்சிப் பழத்தில் வெடிபொருள்களை நிரப்பிக் கொடுத்துள்ளனர்.
இதனை தின்ற யானை வாயில் உள்ள பற்கள் அனைத்தையும் இழந்து வலியால் துடித்து வெள்ளாறு நதியில் இறங்கி, அதிகப்படியான தண்ணீரைக் குடித்துள்ளது.
சில நாள்களுக்குப்பின், வனத்துறை அலுவலர்கள் கர்ப்பிணி யானையை கும்கி யானைகளின் உதவியுடன் மீட்டு சிகிச்சை அளிக்க முற்பட்டனர். ஆனால் கர்ப்பிணி யானை சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் அது உயிரிழந்துள்ளது.
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு பல்வேறு தரப்பினரும் தங்களது கன்டணங்களைத் தெரிவித்தவண்ணம் உள்ளனர். வலியுடன் துடித்து திரிந்தபோதும் அந்த யானை மக்களைத் துன்புறுத்தவில்லை என பலரும் உணர்ச்சிப்பூர்வமாக சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு, இச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கன்டண குரல்களை எழுப்பிவருகின்றனர்.
இதையடுத்து, கேரள வனத்துறையினர் இந்த கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வ விலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். விரைவில் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவர் எனவும் தெரிவித்தனர்.