“இதை நான் ஒரு பெரிய விஷயமாக கருதவில்லை. இதைவிட பெரிய காரியங்களை மக்கள் செய்கிறார்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தலைமுடியை இழந்து, மன உளைச்சலை எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக நான் இதைச் செய்தேன். அடுத்தவருக்கு உதவிசெய்வதிலேயே எனக்கான மகிழ்ச்சி இருக்கிறது” என்று பேசுகிறார் அபர்ணா. உடனே நீங்கள் அவர் செவிலியராகவோ அல்லது மருத்துவம் சார்ந்த துறையில் பணியாற்றுபவர் என்று நினைத்து விட வேண்டாம். அவர் ஒரு பெண் காவலர். கேரளாவின் இரின்ஜலகுடா பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் மூத்த காவல்துறை அதிகாரிதான் அபர்ணா லவாகுமார் (46).
இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, தனது முழங்கால் நீளமுள்ள தலைமுடியை புற்றுநோயாளிகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். அதற்கு பின்னர் மீண்டும் மொட்டையடிக்க அவர் விரும்பமாட்டார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். அழகான கூந்தலை வளர்ப்பதில் ஆர்வம் கொள்ளும் பெண்கள் மத்தியில் அபர்ணாவின் இந்த செயலை மறுபடியும் யாரும் எதிர் நோக்கி இருந்திருக்க மாட்டார்கள். இந்நிலையில் அவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று தன்னுடைய தலையை மொட்டையடித்துக் கொண்டு அலுவலகத்திற்குச் சென்ற செயல் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
திருச்சூர் மாவட்டத்தில் காவலராக பணியாற்றி கொண்டிருந்த அபர்ணா, அங்குள்ள உள்ளூர் பள்ளியொன்றின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். அங்கு ஐந்து வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவரைப் பார்த்து மனம் கலங்கிய அவர், அதன் எதிரொலியாகவே தனது தலைமுடியை தானம் செய்ய முடிவெடுத்திருக்கிறார்.
கேரள காவல்துறையில் சீருடை தொடர்பாக சில விதிகள் இருக்கிறது. தாடி வளர்க்கக் கூடாது, ஆண் காவலரோ பெண் காவலரோ சரியான காரணமின்றி மொட்டையடித்துக் கொள்ளக் கூடாது என்பது உள்ளிட்ட பல காரணங்கள் நடப்பில் பின்பற்றப்படுகின்றன.
இந்நிலையில் மொட்டையடித்துக்கொள்ள திருச்சூர் கிராமப்புற மாவட்ட காவல்துறைத் தலைவர் என். விஜயகுமாரிடம் அவர் அனுமதி கேட்ட தருணத்தை நினைவு கூர்ந்த அபர்ணா, ’இதையெல்லாம் விட்டு விட நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?’ என்று அவர் வியந்து பேசியதாகவும் பின்னர் அனுமதி அளித்ததாகவும் கூறுகிறார். 46 வயதுள்ள அபர்ணாவின் இந்த செயலே நம்மை இவ்வளவு பிரமிப்பை ஏற்படுத்தும் போது இளம் வயதுடைய அவரது மகள்கள் தேவிகா, கௌரி ஆகியோரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முடி தானம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது முடி தானம் செய்த அவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வைரலாகி வரும் நிலையில், 2008ஆம் ஆண்டே இவர் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டவர் என்பதையும் மறந்து விடமுடியாது. அப்போது இவர் ஒரு கொலை வழக்கு விசாரணைக்காக தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். அங்கு உயிரிழந்த ஒருவரின் உடலை மருத்துவ கட்டணத்தைச் செலுத்திய பின்பு பெற்றுக்கொள்ளுங்கள் என்று மருத்துவமனை வலியுறுத்தியுள்ளது. அதற்கான பணம் இல்லாமல், அந்தக் குடும்பத்தினர் தவித்துக் கொண்டிருந்த தருணத்தில், அதை கேள்விப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தன்னுடைய கையில் போட்டிருந்த தங்க வளையலை கழட்டிக் கொடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜனி என்பவருக்கு புற்றுநோய் இல்லாமலேயே, அதற்கான கீமோதெரபி சிகிச்சை வழங்கப்பட்ட அதே கேரள மாநிலத்தில் ஒரு பெண் காவலரின் இந்த செயல், அந்த மருத்துவர்களுக்கு நிச்சயமாக ஒரு பாடத்தைக் கற்பிக்கும். புற்றுநோய் உடைய குழந்தைகளுக்கு அந்த நோய் தரும் தாக்கத்தை விட அந்த நோயால் ஏற்படும் இழப்புகளின் தாக்கமே அதிகம் என்பதை உணர்ந்த அபர்ணாவின் செயல் பாராட்டுக்குரியது. அபர்ணாவின் சேவை தொடரட்டும்!
இதையும் படியுங்க:
நோய் இல்லாப் பெண்ணுக்கு சிகிச்சை - இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்க உத்தரவு!