கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்தவர் வர்ஷா. இவர் தனது தாயின் கல்லீரல் அறுவைச் சிகிச்சைக்காக சமூக வலைதளங்களில் உதவி கோரினார். இதையடுத்து, அவருக்கு சமூகச் செயற்பாட்டாளர்கள் சிலர் உதவி செய்ததன் மூலம், சில நாள்களில் அவரது வங்கிக் கணக்கிற்கு 1.25 கோடி ரூபாய் வந்தது.
கிடைத்த தொகையில், அவரது தாய்க்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இந்நிலையில், தனக்கு தேவையான அளவிற்கும் மேலாக நிதியுதவி கிடைத்துவிட்டதாகவும், இனி தனக்கு யாரும் உதவி செய்ய வேண்டாம் எனக்கூறி சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டார்.
பின்னர், நிதி கிடைக்க உதவிய சமூகச் செயற்பாட்டாளர்கள் சிலர் மீதமுள்ள பணத்தைத் தங்களிடம் ஒப்படைக்குமாறும், தனது வங்கிக் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பைத் தங்களிடம் வழங்குமாறும் தொடர்ந்து துன்புறுத்துவதாக வர்ஷா கொச்சி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இதற்கிடையில், இவருக்கு உதவிய சிலர் ஹவாலா பணத்தை அளித்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்திவருவதாகவும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.