கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலை அருகே உள்ள பெட்டிமுடி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவு காட்டாற்று வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சுமார் 80 பேர் வரை சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களே ஆவர். நிலச்சரிவில் சிக்கியவர்களில், முதற்கட்டமாக 12 பேர் பலத்தக் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற மீட்புப் பணியில் குழந்தைகள், பெண்கள், என 55 பேர் இதுவரை சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர். மேலும், மாயமான 15 பேரது உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய இந்த கோர விபத்து நிகழ்ந்த இடத்தை கேரள முதலமைச்சர் நேரில் சந்திக்கவில்லை என்றும், கோழிக்கோடு விமான விபத்தில் காட்டிய அக்கறையை பெட்டிமுடியில் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. நிவாரண உதவிகள் அறிவிப்பதிலும் கூட பாரபட்சம் காட்டப்படுவதாக கேரள அரசு மீது விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், பெட்டிமுடி விபத்து நிகழ்ந்து ஏழு நாட்கள் கழித்து சம்பவ இடத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அம்மாநில ஆளுநர் ஆரீப் முகமது கானுடன் நேற்று (ஆக.13) நேரில் சென்று பார்வையிட்டார்.
திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் மூணாறு வந்திறங்கிய பினராயி விஜயன், மற்றும் ஆரீப் முகமது கான் இருவரும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அதனைத் தொடர்ந்து பெட்டிமுடி பகுதிக்குச் சென்று அங்கு நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். பணிகளை மேலும் துரிதப்படுத்த உத்தரவிட்டனர்.
இதனையடுத்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பினராயி விஜயன், ”பெட்டிமுடியில் ஏற்பட்ட சோகம் குறித்த தகவல்கள் வெளிவந்த பின்னர் மிகவும் விழிப்புடன் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேடல் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இறந்தவர்களின் குடும்ப நிலையை ஆராயும்போது, அந்த குடும்பங்களில் ஒரு சிலரே எஞ்சியுள்ளனர். ஒரு சிலர் மட்டுமே பிழைத்துள்ளனர். இதற்கு முன்னர் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட புத்துமலா மற்றும் காவலப்பராவில் உள்ள குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிப்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது. பெட்டிமுடியிலும் இதே நிலைப்பாட்டை அரசாங்கம் எடுக்கும்.
இந்த குடும்பங்கள் அனைத்திற்கும் புதிய வீடுகள் கட்ட அரசாங்கம் தயாராக உள்ளது. குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களின் கல்வி தொடர வேண்டும். குழந்தைகளின் கல்விச் செலவுகள் அனைத்தும் அரசாங்கத்தால் ஏற்கப்படும். தப்பியவர்கள் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் சிகிச்சையின் முழு செலவும் அரசாங்கத்தால் ஏற்கப்படுகிறது” எனக் கூறினார்.
இந்நிகழ்வில், கேரள அமைச்சர்கள் எம்.எஸ்.எம். மணி, இ.சந்திரசேகரன், இடுக்கி எம்பி குரியகோஸ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
7ஆவது நாளான நேற்றைய மீட்புப் பணியின் போது மோசமான வானிலை நிலவியதால், நிலச்சரிவில் சிக்கியவர்கள் யாரும் கண்டெடுக்கப்படவில்லை. இன்றும் (ஆக.14) மீட்புப் பணிகள் தொடரும் என இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கேரள நிலச்சரிவில் உயிரிழந்தவர்களை மீட்டுத்தரக் கோரிக்கை!