பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியா வந்துள்ள சிறுபான்மையினரான இஸ்லாமியர் அல்லாதோருக்கு, எளிதில் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்யும் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா சமீபத்தில் சட்டமாக்கப்பட்டது.
இந்நிலையில், மசோதாவுக்கு எதிராக அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்களும், இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே மேடையில் விஜயன், ரமேஷ் சென்னிதாலா
இதற்கிடையே, கேரள மாநிலத்திலும் மசோதாவுக்கு எதிர்ப்புக் கிளம்பி உள்ளது. இந்நிலையில், இன்று திருவனந்தபுரத்தில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியினர், காங்கிரஸின் தேசிய முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் கேரள முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒரே மேடையில் ஒன்றாக அமர்ந்து பங்கேற்றுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயன், ' நாட்டின் நிலைமை நிலையற்றதாகிவிட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளா ஒன்றுபட்டு நிற்கிறது’ என்றார்.
இதையும் படிங்க: ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்: பதற்றத்தில் டெல்லி!