கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு 34 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்தச் சூழலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயன்றுவருகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு மாநிலத்தில் நிலவும் சூழலைப் பற்றி அறிந்துகொள்வதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதில் கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா எனப் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்ட நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்துகொள்ளவில்லை.
அவருக்குப் பதிலாக கேரள அரசின் தலைமைச் செயலர் டாம் ஜோஸ் கலந்துகொண்டார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கேரள அரசுத் தரப்பு வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போதே கேரள மாநிலத்திற்கு பேச அனுமதி அளிக்கப்பட்டது. இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேச வாய்ப்பு கிடைக்காத மாநிலங்கள் மட்டுமே பேச முடியும்.
அதனால் முன்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாநிலம் தங்களது கருத்துகளை எழுத்துப் பூர்வமாகத் தாக்கல்செய்யலாம்.
கேரள முதலமைச்சர் ஏற்கனவே கடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தனது கருத்துகளைத் தெளிவாக விவரித்துவிட்டார். அதனால்தான் இந்தக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரளாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 458 ஆக இருக்கும் நிலையில், இதுவரை 4 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரே மருத்துவமனையில் 33 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா