பொருளாதார ரீதியில் பின்தங்கிய பொதுப் பிரிவைச் சேர்ந்த சாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க புதிய இட பங்கீட்டு முறையை சென்ற ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதனை அமல்படுத்துவது தொடர்பாக முடிவெடுக்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நேற்று (அக்டோபர் 21) அம்மாநிலத்தின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில், நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டு முறைக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் இ.டபிள்யூ.எஸ் பொது பிரிவினருக்கு அரசுத் துறைகள் மற்றும் அதன் துணை அலுவலக பணி வாய்ப்புகளில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக கேரள அரசு வெளியிட்டுள்ள குறிப்பில், "ஓய்வுபெற்ற நீதிபதி கே.சசிதரன் நாயர் மற்றும் மூத்த வழக்குரைஞர் கே.ராஜகோபாலன் நாயர் தலைமையில் அமைக்கப்பட்ட இருவர் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கேரள அரசு நன்கு பரிசீலித்தது. அது தொடர்பாக அமைச்சரவையில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அரசியலமைப்பின் 103ஆவது திருத்தம் மற்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளை ஏற்று பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு மற்றும் சேர்க்கைகளில் 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது. தற்போது, நடைமுறையில் உள்ள 50 விழுக்காடு இடஒதுக்கீடு முறைக்கு சிக்கல் ஏற்படாத வண்ணம் இந்த புதிய 10 விழுக்காடு இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும்.
பட்டியல் சாதியினர், பழங்குடியின பிரிவினர், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இட பங்கீட்டிற்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் அரசு எச்சரிக்கையுடன் இதனை கையாளும். இட ஒதுக்கீட்டை பெறும் தகுதி வாய்ந்த பயனாளர்களின் குடும்பத்தின் வருமானம் மற்றும் அவர்களின் நிதி பின்தங்கிய நிலை குறித்து முழுமையாக ஆராய்ந்து பின்னர் அவர்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு செய்வதற்கான அளவுகோல்களை இந்த கூட்டம் முடிவெடுத்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான சமூக வலைதளங்களில் நடைபெற்றுவரும் சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ள காவல்துறை சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அத்துடன், பாலியல் வன்கொடூர குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்கும் அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.