பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு முதல்முறையாக பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் ஒரு அங்கமாக அகமதாபாத்தில் நடைபெறவுள்ள 'நமஸ்தே ட்ரம்ப்' என்ற நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கலந்துகொள்ளவுள்ளனர். ட்ரம்புடன் அந்நாட்டு முதல் பெண்மணி மெலனியா ட்ரம்பும் இந்தியாவுக்கு வருகைதரவுள்ளார்.
அப்போது, டெல்லி மோதி பாக் பகுதியில் அமைந்துள்ள அரசுப்பள்ளிக்கு மெலனியா செல்லவுள்ளார். மாணவர்கள் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவர், பின்னர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இதற்காக, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டெல்லி அரசு சார்பாக நடத்தப்படும் 'மகிழ்ச்சியான வகுப்புகள்' என்ற நிகழ்ச்சியில் மெலனியா கலந்துகொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நபர்களின் பட்டியலில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா ஆகியோரின் பெயர் இடம்பெறவில்லை. அரசு சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்காதது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: இந்திய - அமெரிக்க நட்புறவை பறைசாற்றவுள்ள 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சி!