கரோனா தடுப்பூசி குறித்த பாஜகவின் தேர்தல் அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிகார் தேர்தலில் வெற்றி பெற்றால், அந்த மாநில மக்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மற்ற மாநில மக்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படாதா என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்ட பாலத்தை திறந்து வைத்துப் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "கரோனா தடுப்பூசி நாடு முழுவதும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். அது மக்களின் உரிமை. பெருந்தொற்று காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், அதற்கான தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
தடுப்பூசி தயாராகும்பட்சத்தில், கரோனா சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு, அதனை மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி முதன்மையாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும்" என்றார்.