பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக இயக்குநர்களுடன் (பி.எஸ்.பி) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காணொலி காட்சி மூலம் மறுஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
இந்த சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், "கரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியில் பெரும் இன்னலுக்குள்ளாகி இருக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இணையில்லா அவசர கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் தொடர்ந்து கடனுதவிகளை வழங்கிவருதை பாராட்டுகிறேன். மனதார வாழ்த்துகிறேன். தொடர்ந்து இந்த பணியை நீங்கள் அனைவரும் முன்னெடுக்க வேண்டும்.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது பிற வணிகங்களுக்கும் கடன் உதவிகளை வழங்கி, இக்கட்டான இந்த சூழலில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டும். அரசின் திட்டங்கள் அவர்களை சென்றடைய உறுதுணையாக நிற்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.
இது தொடர்பாக நிதி சேவைகள் துறை தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்திய அரசின் ஆத்மநிர்பார் பாரத் தொகுப்பின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட கோவிட் அவசர கடன் வசதி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை மட்டுமல்லாமல் அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்கியது என எஃப்.ஐ.சி.சி.ஐ தேசிய செயற்குழு உறுப்பினர்களிடையே மத்திய நிதியமைச்சர் சீதாராமன் அறிவுறுத்தினார்.
பிணையில்லா கடன் வழங்குவதற்கான கோரிக்கைக்கு வங்கிகள் விரைவாக பதிலளித்ததையும், அவசரகால கடன் வரி உத்தரவாத திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் கோடி ரூபாயை வங்கிகள் அனுமதித்துள்ளதையும் அவர் பாராட்டினார். கிளை மட்டத்தில் செயல்திறனைத் தக்க வைத்துக் கொள்ளவும், ஈ.சி.எல்.ஜி.எஸ் படிவங்களை எளிமையாகவும், முறைப்படி வைத்திருக்கவும் வங்கிகளுக்கு சீதாராமன் அறிவுறுத்தினார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் ஆத்மனிர்பர் பாரத் பொருளாதார தொகுப்பின் ஒரு பகுதியாகும். கரோனா வைரஸ் தொற்றுநோயின் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியில், தகுதி வாய்ந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலமாக இணை இல்லாத, பிணை இல்லாத கடனுதவிகளை வழங்க மத்திய அரசு ரூ. 3 லட்சம் கோடி வரை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.