தெலங்கானாவில் கடந்த ஒரு வார காலமாக கடும் மழை பொழிந்துவருகிறது. குறிப்பாக, அக்டோபர் 17ஆம் தேதியன்று பெய்த கடும் மழையை அடுத்து தலைநகர் ஹைதராபாத்தின் சில பகுதிகளில் வெள்ளக்காடாக மாறியது.
தெலங்கானா அரசின் முதற்கட்ட மதிப்பீட்டில், மழை வெள்ளத்தால் ரூ. 5,000 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மாநிலம் முழுவதும் பெய்த கன மழையின் காரணமாக ஏறத்தாழ 70 பேர் உயிரிழந்ததாக தெலங்கானா அரசு தகவல் தெரிவித்துள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் பெய்த மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அம்மாநிலத்திற்கு நல்லெண்ண அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10 கோடி ரூபாயை நிவாரண உதவி நிதியாக வழங்குவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் , தமிழ்நாடு அரசின் உதவிக்கு தெலங்கானா முதலமைச்சர் கே.சி.ஆர் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தொலைபேசி மூலம், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்ட அவர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவில் மாநில அரசு மேற்கொண்டுவரும் நிவாரண பணிகளுக்கு ரூ. 10 கோடி உதவி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.
இதற்கிடையில், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் நிதி உதவி புரிந்தமைக்கு தொலைபேசி மூலம் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "தெலங்கானா அரசிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்துதர தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது" என உறுதியளித்ததாக அறிய முடிகிறது.
அதேபோல, தெலங்கானா அரசுக்கு ரூ.15 கோடியை நிவாரண பணிகளுக்காக வழங்குவதாக அறிவித்த டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் தெலங்கானா மக்கள் சார்பாக அம்மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் நன்றி கூறியது கவனிக்கத்தக்கது.