கரோனா பெருந்தொற்றுக்கிடையே, பாகிஸ்தானிலிருந்து வந்த பாலைவன வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வேளாண்மைப் பயிர்களை நாசம் செய்துவருகின்றன.
இந்நிலையில், இவை தென்மாநிலமான தெலங்கானாவுக்குப் படையெடுக்க வாய்ப்புள்ளதால் அலுவலர்கள் எச்சரிக்கையுடனும், தயாராகவும் இருக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "மூன்று கட்டங்களாகக் கடந்த மாதம் இந்தியாவுக்குப் படையெடுத்த வெட்டுக்கிளிகள், தற்போது அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசத்தில் தாக்குதல் நடத்திவருகின்றன.
இதுவரை தெலங்கானா மாநிலத்துக்கு அவை படையெடுக்கவில்லை. ஆனால், தெலங்கானாவிலிருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள அஜிமி என்ற மகாராஷ்டிர கிராமத்துக்கு வெட்டுக்கிளிகள் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவை ஜூன் 20 - ஜூலை 5ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் எப்போது வேண்டுமானாலும் தெலங்கானாவுக்குப் படையெடுக்கலாம். இதனைக் கருத்தில்கொண்டு மகாராஷ்டிராவை ஒட்டியுள்ள எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்கள் எச்சரிக்கையுடனும், தயாராகவும் இருக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் (கேசிஆர்) தலைமையில் பிரகதி பவனில் உயர்மட்ட அலுவலர்களுடன் நடந்த கூட்டத்தில், வெட்டுக்கிளித் தாக்குதலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வெட்டுக்கிளிப் பேரிடரை எதிர்கொள்ள, தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் அம்மாநில தலைமைச் செயலர் சோமேஷ் குமார் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை நியமித்துள்ளார்.
இதையும் படிங்க : கட்டுக்குள் வெட்டுக்கிளி தாக்குதல் - ராஜஸ்தான் அரசு