ஸ்ரீநகர்: 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா 2016 செப்டம்பரில் பிரான்சுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இரு அரசுக்கு இடையேயான இந்த ஒப்பந்தம் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன.
இந்நிலையில் திங்கள்கிழமை (ஜூலை27) ரஃபேல் விமானங்கள் பிரான்சிலிருந்து தங்களது பயணத்தை இந்தியாவுக்கு தொடங்கின. ஐக்கிய அரபு அமீரகத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு, இந்த விமானங்கள் புதன்கிழமை இந்தியாவுக்கு வந்தன. இது போர் விமானி ஹிலால் அஹமது ராதரால் (52) சாத்தியமானது.
யார் இந்த ஹிலால் ராதர்
பிரான்சில் இந்தியாவின் தூதரகத்தில் தற்போது பணியாற்றி வரும் ஏர் கமாண்டரான ராதர், ரஃபேல் ஜெட் விமானத்தில் பறந்த முதல் இந்திய போர் விமானி ஆவார். இவரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் "ஹீரோ" (கதாநாயகன்) என்று குறிப்பிடுவதற்கான ஒரே காரணம் அதுவல்ல.
ஏர் கமாண்டர் ராதர் மீதான அனைத்து பாராட்டுகளுக்கும் முக்கிய காரணம், இந்த ஒப்பந்தத்தில் அவர் முக்கிய பங்காற்றினார்.
இந்திய விமானப் படையை நவீனமயமாக்குவதற்கு அவர் திறம்பட பணியாற்றினார். இவர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர். உள்ளூர் மாண்டிசோரி பள்ளியில் தனது அடிப்படை பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் ஜம்முவின் நக்ரோட்டாவிலுள்ள சைனிக் பள்ளியில் சேர்ந்தார்.
இறுதியில் தேசிய பாதுகாப்பு அகாதமியில் (என்.டி.ஏ) சேர்ந்தார். அவர் டிசம்பர் 17ஆம் தேதி, 1988ஆம் ஆண்டு, இந்திய விமானப் படையில் போர் விமானியாக நியமிக்கப்பட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளில், அவர் விமான லெப்டினன்டாக பதவி உயர்வு பெற்று 2004 இல் விங் கமாண்டராகவும், 2016 இல் குரூப் கேப்டனாகவும் உயர்ந்தார். தற்போது ஏர் கமாண்டர் என்ற உயர் பதவியை அலங்கரிக்கிறார்.
இவர் இந்திய விமானப் படையில் மூன்று தசாப்தங்களாக சீரிய முறையில் பணிபுரிந்துவருகிறார். இவரின் சேவையை பாராட்டி, 2010ஆம் ஆண்டு வாயு சேனா பதக்கமும் (Vayu Sena), 2016ஆம் ஆண்டில் விசித் சேவா பதக்கமும் (Vishisht Seva) வழங்கப்பட்டுள்ளது.
ஹிலால் ராதரின் கனவு
ஹிலார் அஹமது ராதரின் வெற்றிப் பயணம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் அவரின் சொந்த பகுதியில் எந்தவொரு கொண்டாட்டமும் இல்லை. ஆனால் அவரின் இளமைப் பருவம் குறித்து அண்டை வீட்டார், உள்ளூர்வாசிகள், நண்பர்கள் நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.
ராதரின் நண்பர் ஒருவர் கூறும்போது, “ராதர் சிறு வயதில் இருந்தே, ஹெலிகாப்டர், விமானங்கள் என்று கனவு காண்பவன். அதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பான்” என்றார்.
ராதரின் நெருங்கிய உறவினர் ஒருவர் கூறுகையில், “அவர் ஒரு புத்திசாலித்தனமான மாணவராக இருந்தார். இன்று அவர் விரும்பியதைப் பெற்றார். அவரது தந்தையும், தாயும் கல்லறையில் நீங்கா துயில் கொள்கின்றனர். தற்போது அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஏனெனில் அவர்களின் கடைசி குழந்தை அவர்களுக்கு பெருமை சேர்க்கிறான்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "ஹிலாலின் மூத்த சகோதரர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் அவர்களது மூதாதையர் வீட்டில் வசித்து வருகிறார். ஆனால் அவர் கடந்த சில ஆண்டுகளாக ஆரோக்கியமாக இருக்கவில்லை. ஹிலால் எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளார், பாதுகாப்பு காரணங்களுக்காக பெருமளவு கொண்டாட்டங்கள் இருக்கவில்லை” என்றார்.
ரஃபேல் ஒப்பந்தம்
2007 ஆம் ஆண்டில் 126 போர் விமானங்களை வாங்குவதற்கான செயல்முறையை இந்தியா தொடங்கியது, அப்போது ஏ.கே. அந்தோணி பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார். இந்திய விமானப் படையை வலுவாக்க ரஷ்யாவிலிருந்தும் போர் விமானங்கள் வாங்கப்பட்டன.
இந்நிலையில், நீண்டகால செயல்முறைக்குப் பிறகு, டிசம்பர் 2012ஆம் ஆண்டில் ஒப்பந்தம் தயாரானது. இந்தத் திட்டத்தில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து பிரான்சில் 18 விமானங்களும், இந்தியாவில் 108 விமானங்களும் தயாரிக்கப்பட இருந்தன.
இது தொடர்பான விலைகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்து அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கும் டசால்ட்டுக்கும் இடையே நீண்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன.
இறுதி பேச்சுவார்த்தைகள் 2014 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை தொடர்ந்தன, ஆனால் ஒப்பந்தத்தை இறுதிசெய்ய முடியவில்லை. இந்நிலையில், பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷனில் இருந்து 36 ரஃபேல் ஜெட் விமானங்களை அவசரகால கையகப்படுத்துதலுக்காக செப்டம்பர் 23, 2016 அன்று ரூ.59,000 கோடி ஒப்பந்தத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தத்தின் முதன்மையான நோக்கம், இந்திய விமானப் படையை (IAF) வலிமையாக்குவது. ஆனால் போர் விமானங்கள் குறைக்கப்பட்டுள்ளது, கவலைக்குரிய விஷயமாகும்.
இந்திய போர் விமானிகள் 12 பேர் இதுவரை பிரான்சில் உள்ள ரஃபேல் போர் விமானங்கள் குறித்த பயிற்சியை முடித்துள்ளனர். மேலும் சிலருக்கு புதிதாக வாய்ப்பளித்து பயிற்சியும் அளிக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: ரஃபேல், இந்தியப் போர் விமானங்களைப் பற்றிய சுருக்கம்!