காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த முடிவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை எழுந்த நிலையில், வழங்கறிஞர் எம்.எல். ஷர்மா, 'காஷ்மீர் டைம்ஸ் நாளிதழ்' ஆசிரியர் அனுராதா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். மக்களின் கருத்தை கேட்காமலேயே அவர்கள் மீது கட்டுப்பாடுகள் திணிக்கப்பட்டு வருவதாகவும் மனு தாரர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில், இந்த இரு மனுக்களும் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் பாப்டே, அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவு நீக்க விவகாரத்தில் என்ன நிவாரணம் வேண்டும்? உங்கள் கோரிக்கை என்ன? என்று மனுதாரிடம் கேள்வியெழுப்பினர்.
சுமார் அரை மணி நேரம் படித்து பார்த்தும் தங்கள் மனுவை புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறிய தலைமை நீதிபதி, பிழைகளை சரி செய்து 370ஆவது சட்டப்பிரிவு நீக்கத்துக்கு எதிராக மீண்டும் மனு தாக்கல் செய்ய கோரி மனுதாரர் எம்.எல். ஷர்மாவிற்கு உத்தரவிட்டுள்ளார்.