கர்நாடகா மாநிலம் பைடகியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, காளைகள் பங்கேற்கும் ஹோரி ஹப்பா கேமை கண்டுகளிப்பதற்காக தனி ரசிகர் பட்டாளமே தயார் நிலையில் உள்ளது. இந்த போட்டிக்காக தமிழ்நாட்டிலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு ஆக்ரோஷமான காளையை பைடகி பகுதியைச் சேர்ந்த ஒருவர் வாங்கியுள்ளார். அதற்கு, அர்ஜூன் 155 என பெயிரிட்டுள்ளனர். இந்த காளையின் தரிசனத்தை காண்பதற்காக மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காளையின் கம்பீர தோரனையை பார்த்த ஓவியர் ஃபகிரேஷ் என்பவர், அர்ஜூனின் படத்தை சுவர்களில் மிகழ்ச்சியுடன் வரைந்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், "அர்ஜூன் 155 காளையின் மிகப்பெரிய ரசிகன் நான். காளையின் புகைப்படங்களை பல பகுதிகளில் உள்ள சுவர்களில் வரைந்தேன். அதன்பிறகு, எனக்கு ஓவியம் வரைவதற்காக பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தன. விரைவில் நடைபெறவுள்ள ஹோரி ஹப்பா கேமில் அர்ஜூன் நிச்சயம் பல பரிசுகளை வாங்கும். அர்ஜூன் ஏற்கனவே, நீச்சல், ஓட்டப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தயார்படுத்தி வருகிறது எனத் தெரிவித்தார்.
ஹோரி ஹப்பா என்பது புல் டேமிங் போட்டி ஆகும். இதில் நூற்றுக்கணக்கான பயிற்சி மற்றும் அலங்கரிக்கப்பட்ட காளைகள் மக்கள் கூட்டத்தின் இடையே அடக்கப்படுகின்றன. மேலும், காளைகளை அடக்கும் வீரர்கள் பரிசுகளை அள்ளிச்செல்வர்.