உலகையே மிரட்டிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவிவருகிறது. வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சித்துவருகின்றன.
இந்தச் சூழலில், அமெரிக்காவிலிருந்து சமீபத்தில் நாடு திரும்பிய மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில மருத்துவ கல்வித் துறை அமைச்சர் டாக்டர் கே. சுதாகர் கூறுகையில், "அமெரிக்காவிலிருந்து பெங்களூரு திரும்பிய மென்பொருள் பொறியாளருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது" என்றார்.
மேலும் பேசிய அவர், "அமெரிக்காவின் ஆஸ்டின் பகுதியில் வசித்துவரும் இவர் குடும்பத்தைப் பார்ப்பதற்காக மார்ச் 1ஆம் தேதி பெங்களூரு வந்துள்ளார். பின் வைரஸ் அறிகுறிகள் இருந்ததை உணர்ந்து தானாகவே ராஜீவ் காந்தி மார்பக நோய் மருத்துவமனையில் தன்னை அனுமதித்துக்கொண்டார்" எனக் கூறினார்.
கர்நாடகாவில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட முதல் நபர் இவர் ஆவார். இந்தியாவில் இதுவரை 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : ஐபிஎல் நடக்குமா... கங்குலியின் பதில் என்ன?