இந்தியாவில் கரோனா தொற்றின் வீரியத்தால் ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளின்றி மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருந்தகங்கள், அத்தியாவசிய பொருள்களை விற்கும் கடைகள் ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து மற்றவைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆன்லைன் மூலம் பொருள்கள் ஆர்டர் செய்யவும், உணவு ஆர்டர் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு பொருள்களைக் கொண்டுவர முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இதில் மக்களுக்கு அவசிய தேவையான மருந்து பொருள்களும் விதிவிலக்கல்ல.
இந்த சூழலில், கேன்சர் நோயாளி ஒருவர் ஆர்டர் செய்த மருந்து ஊரடங்கால் சிக்கிக்கொள்ள, தலைமைக் காவலர் (ஏட்டய்யா) நீண்ட தூரம் பயணம் செய்து அதனை வாங்கி வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தர்வாட் நகரத்திலுள்ள மனிகன்டா நகரைச் சேர்ந்த கேன்சர் நோயாளி உமேஷ் என்பவருக்கு மருந்து தேவைப்பட்டுள்ளது. ஊரடங்கால் பெரும்பாலான மருந்தகங்களில் உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வசிக்கும் பகுதிக்கு அருகேயுள்ள மருந்தகங்களில் அந்த மருந்து கிடைக்கவில்லை. மேலும் அம்மருந்து பெங்களூருவிலுள்ள இந்திரா நகர் என்ற இடத்தில்தான் கிடைக்கும் என்பதால், ஆன்லைனில் உமேஷ் ஆர்டர் செய்துள்ளார்.
ஆர்டர் செய்த சமயத்தில் மாநிலம் முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால், போக்குவரத்து தடை ஏற்பட்டு, மருந்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தச் செய்தி கர்நாடக செய்தி சேனல்களில் ஒளிபரப்பாகியுள்ளது. இதனை பெங்களூருவிலிருந்த குமாரசாமி பார்த்துள்ளார். உடனடியாக உமேஷுக்கு மருந்து வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிய அவர், அவரின் மொபைல் நம்பரை சேகரித்து கால் செய்து விசாரித்துள்ளார்.
உமேஷ் தனக்கு வேண்டிய மருந்து கிடைக்கும் இடத்தை குமாரசாமியிடம் கூறியுள்ளார். தகவல்களைப் பெற்றுக்கொண்டு மருந்தை வாங்கிய குமாரசாமி, தன்னுடைய மூத்த அலுவலரிடம் அனுமதி வாங்கி சோலோவாக பைக்கில் பறந்துள்ளார். கையில் வாட்டர் பாட்டில், பிஸ்கட்டுடன் சுமார் 430 கிமீ தூரத்தை 10 மணி நேரத்தில் கடந்து உமேஷின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
காலிங் பெல் ஒலி கேட்டு வெளியில் வந்து பார்த்த உமேஷ், குமாரசாமியைக் கண்டு இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார். தான் கொண்டு வந்த மருந்தைக் கொடுத்துவிட்டு குமாரசாமி மீண்டும் பெங்களூருக்கு சிட்டாக பறந்துள்ளார். அவரின் இந்தச் செயலை பாராட்டி பெங்களூரு காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் சான்றிதழ் வழங்கினார்.
தமிழ் படங்களில் ஏட்டய்யா கதாபாத்திரம் வெறும் காமெடிக்காகவே பயன்படுத்தப்படும். ஆனால் நிஜத்தில் மக்களுக்கு சேவையாற்றும் உற்ற தோழனாக சிலர் வாழ்கின்றனர்.