கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பார்கள், கேளிக்கை விடுதிகள், பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன.
இந்நிலையில், பெங்களூருவில் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து ஊரடங்குக் கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்ட நிலையில், நான்காம் கட்ட ஊரடங்குத் தளர்வில் பார்கள், கேளிக்கை விடுதிகள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் பார்கள் திறக்கப்பட்டது குறித்து பேசிய பார் உரிமையாளர் கிரண் ராஜ், ”கடந்த நான்கு ஐந்து மாதங்களாகலே கடும் வேதனைகளை சந்தித்து வருகிறோம். வருவாயின்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருந்தோம்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்குத் தளர்வினால் அதிகப்படியான மக்கள் மீண்டும் பார்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர். அவர்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனுமதிக்கப்படுகின்றனர்.
பார்களுக்கு வருபவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை, கிருமி நாசினி தெளிப்பது, முகக் கவசங்கள் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாக முன்னெடுத்து வருகிறோம். மேலும். பார்களில் உள்ள இருக்கைகளை அடிக்கடி சுத்தம் செய்து வருகிறோம். தகுந்த இடைவெளிகளைப் பின்பற்றியே இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.