14 மாதங்கள் கர்நாடகாவை ஆட்சி செய்த காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றதன் மூலம், பாஜகவின் எடியூரப்பா அம்மாநில முதலமைச்சராக நான்காவது முறையாக பதவி ஏற்றார்.
காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 17 அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அந்த 17 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, "தேர்தலுக்கு தயாராக இருங்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படலாம் அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்படலாம். இந்த அரசு நீண்ட காலம் நிலைக்காது. இனி யாருடனும் கூட்டணி இல்லை. எனக்கு அதிகாரம் தேவையில்லை; மக்களின் அன்புதான் தேவை" என்றார்.