கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே. சிவக்குமார் மீது பண மோசடி குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகள் பதியப்பட்டன.
இதையடுத்து அவர் மீது அமலாக்கத் துறை விசாரணை செய்தது. இந்த நிலையில் அவருக்கு முன்பிணை மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 3ஆம் தேதி அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் பிணை கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை டி.கே. சிவக்குமார் மறுத்தார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் டி.கே. சிவக்குமாருக்கு முன்பிணை வழங்க, அமலாக்கத் துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ”அவர் (டி.கே. சிவக்குமார்) ஒரு செல்வாக்குமிக்க நபர். அவருக்கு முன்பிணை கிடைக்கும்பட்சத்தில் வெளியில் சென்று சாட்சியங்களைக் கலைக்கக்கூடும்” என்று ஆட்சேபம் தெரிவித்தார்.
இதற்கிடையே நீதிபதி சுரேஷ் கெய்த், டி.கே. சிவக்குமாருக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட்டார். நீதிபதி தனது முன்பிணை உத்தரவில், ரூ.25 லட்சம் பிணைப்பத்திரம், இரண்டு பிணைதாரர்கள் (ஜாமீன்தாரர்) கையெழுத்திட வேண்டும், எக்காரணம் கொண்டும் டி.கே. சிவக்குமார் வெளிநாடு செல்லக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: டி.கே. சிவக்குமார் கைதை கண்டித்து பேருந்து எரிப்பு: ஆதரவாளர்கள் அட்டூழியம்