அவசரகால மருத்துவ சேவை வழங்கும் நிபுணர்கள் குழுவான ஐசிஏடிடி, விமானத் தொழில்நுட்ப நிறுவனமாக கியாதி ஆகியவை இணைந்து நாட்டின் முதல் ஏர் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கியுள்ளன.
இந்த வகையான விமானங்கள் மூலம் நீண்ட தொலைவில் இருப்பவர்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. மேலும், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவைகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஏர் ஆம்புலன்ஸ்கள் தற்போது பெங்களூருவின் ஹெச்ஏஎல் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், ''ஐசிஏடிடி - கியாதி நிறுவனங்கள் இணைந்து ஒருங்கிணைந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்துவதால் விரைவாக மருத்துவ உதவி மட்டுமல்லாமல், தரமான மருத்துவ சிகிச்சையும் வழங்க முடியும். விமான ஆம்புலன்ஸிலேயே மூத்த மருத்துவர்களால் வழங்கப்படும் மருத்துவ சேவையையும் உறுதி செய்ய முடியும்.
ஐசிஏடிடி - கியாதி நிறுவனங்கள் பெங்களூருவில் இதனை அமைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இது கர்நாடகாவுக்கு மட்டுமல்லாமல், தென்னிந்தியாவுக்கே சேவையாற்றும் வகையில் அமைந்துள்ளது. கரோனா மருத்துவ சேவைகள் தேவைப்படக்கூடிய இந்த அவசர காலக்கட்டத்தில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது மகழ்ச்சியாக உள்ளது” என்றார்.
கேரள வெள்ள நிவாரணப் பணிகளின்போது ஐசிஏடிடி, ஹெம்ஸ் நிறுவனங்கள் மக்களின் உயிர்களைக் காப்பாற்றியதில் முக்கியப் பங்காற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லாலுவின் அரசியல் ஆட்டம் இனிதான் தொடங்கவுள்ளது!