கர்நாடகாவில் மஜத- காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு நம்பிக்கைக்கோரும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள தவறிய 17 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தங்களையும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த என்வி ரமணா தலைமையிலான மூன்றுபேர் கொண்ட குழு இந்திய தேர்தல் ஆணையத்திடம் கலந்தாலோசித்து தேர்தல் தேதியினை அக்டோபர் 21லிருந்து டிசம்பர் ஐந்தாம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்த உத்தரவையடுத்து, நவம்பர் 11ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதிவரை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு நவம்பர் 19ஆம் தேதி மனுக்களின் மீது பரிசீலனை செய்யப்படும். நவம்பர் 21ஆம் மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.