குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. மேற்குவங்கம், கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியலமைப்பு குறித்த சிறப்பு விவாதம் கர்நாடக சட்டப்பேரவையில் மார்ச் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அப்போது, இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற ஆளும் பாஜக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சிறப்பு கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சிஏஏவிற்கு ஆதரவு தெரிவித்தும், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை பாராட்டியும் குஜராத் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்திற்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில அரசு திட்டமிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காஷ்மீரில் இணைய சேவைகள் விரைவில் தொடங்கும் - துணை நிலை ஆளுநரின் ஆலோசகர் நம்பிக்கை!