கர்நாடகாவில் பசு வதை தடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமானது, நாளை(ஜன-18) முதல் அமலுக்கு வரவுள்ளது. ஏற்கனவே, கர்நாடகாவில் பசு வதை தடுப்பு சட்டம் அமலில் இருந்தாலும், குற்றம் செய்வோருக்கு தண்டனை, அபராதம் உள்ளிட்டவை போதுமானதாக இல்லை. எனவே, புதிய வடிவத்தில் தண்டனை நடவடிக்கையை கடுமையாக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின்படி, பசுக்களை சட்டவிரோதமாக விற்பதோ, வேறு இடத்துக்கு கொண்டு செல்வதோ, கொலை செய்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும். ஒருவேளை பசுவுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு அது மற்ற பசுக்களுக்கு பரவும் என தெரிய வந்தால், அந்த கட்டத்தில் மட்டுமே அது வெட்டப்படலாம். பசு கொல்லப்படுவது தெரிய வந்தால், உதவி ஆய்வாளர் அல்லது அதற்கு மேல் பதவியில் உள்ள அலுவலர்கள் எந்தவொரு இடத்திலும் சோதனை நடத்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
குற்றம் செய்யும் நபருக்கு 3 முதல் 7 ஆண்டுகளுக்கு தண்டனை விதிக்கப்படும். சிறைக்காவலுடன் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். 13 வயதுக்கும் மேற்பட்ட எருமை மாடுகளை கொல்ல உரிய முன் அனுமதி பெற்றுக்கொள்ளலாம். மாட்டிறைச்சி சாப்பிட தடை இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பசுவதை தடை சட்டத்திற்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.