63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார், சிவபக்தையாக இருந்து இறைவனிடம் தவமிருந்து மாங்கனி பெற்றதாக ஐதீகம். இதனை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் காரைக்காலில் மாங்கனித் திருவிழா கொண்டாடப்பட்டுவருகிறது. இந்தாண்டு ஜூலை 13ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழா 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய அம்சங்களான ‘மாங்கனி இறைத்தல்’, ‘அமுது படையல்’, சிவபெருமான் பிச்சாண்டவ மூர்த்தியாக பவளக்கால் விமானத்தில் வீதியுலா காட்சி ஆகிய நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன.
அப்போது சிவபெருமானுக்கு மாங்கனிகளை படைத்த பக்தர்கள், அதனை மாடத்திலிருந்து வீதிகளில் இறைத்து தங்களது வேண்டுதல் நிறைவேற வழிபாடு செய்தனர்.
அப்போது கீழே கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாங்கனிகளைப் பிடித்து பிரசாதமாக எடுத்துக்கொண்டனர். மாங்கனித் திருவிழாவில் வீசி எடுக்கப்படும் மாம்பழங்கள் இறைவன் அளித்த அமிர்தமாக நினைத்து பிரசாதமாக உட்கொண்டால் குழந்தை பாக்கியம், திருமண தோஷம் உள்ளிட்ட பல்வேறு குறைகள் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் திடமான நம்பிக்கையாகும்.
மாங்கனித் திருவிழாவையொட்டி இன்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
.