கோவிட் -19 பரவலைத் தடுக்க தவறியாக மத்திய அரசை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறினார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "ராகுல் காந்தி ஒவ்வொரு நாளும் ட்வீட்டரிலேயே அரசியல் செய்கிறார். காங்கிரஸ் கட்சி 'ட்வீட் செய்யும் கட்சி'யாக மாறியுள்ளதாகவே நான் கருதுகிறேன். எல்லா மாநிலங்களிலும் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதால் அக்கட்சி ஒரு சோர்வுற்ற கட்சியாக இப்போது மாறி நிற்கிறது. எல்லா வகையிலும் மத்திய அரசைத் தாக்க முயற்சிக்கிறது, ஆனால் அவை வெற்றிபெறாது" என்றார்.
காங்கிரஸ் , பாஜக இடையே இந்த அறிக்கை போர் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகரின் இந்தக் கருத்தை காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஜூலை21) வெளியிட்டுள்ள காணொலியில், " நீங்கள் சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கிறீர்கள். உங்களால் அரசியலில் இவ்வளவு மாசு ஏற்பட்டு இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? இந்த மாசுபாட்டை நீங்கள் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் உங்கள் அறிக்கைகள் அனைத்திலும் எப்போதும் எதிர்கட்சிகள் மீதான விமர்சனங்கள் மட்டுமே உள்ளன. அதில் விளக்கங்கள் இல்லை.
தற்போது, நம் நாடு முன்னெப்போதுமில்லாத நெருக்கடியை எதிர்கொள்கிறது. எனவே, நீங்கள் அதை குறித்து சிந்தியுங்கள். ராகுல் காந்தி குறித்தும், ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் குறித்தும் கருத்து தெரிவிப்பதற்கு பதிலாக, 'உண்மையான பிரச்னைகளில்' கவனம் செலுத்துங்கள். அரசாங்கத்தை ஆட்சி செய்வது' எப்படி என்று சிந்தியுங்கள்.
உங்கள் மத்திய அரசின் அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறையினர், வடகிழக்கு டெல்லி வன்முறைகளுக்கு சாட்சியான சி.சி.டி.வி. காட்சிகளை யாரையோ காப்பதற்காக அழித்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
அவற்றை மீட்க உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அது குறித்து பேசுங்கள்.
கரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊடரங்கை அறிவிப்பதற்கு முன்னர் மகாபாரதத்தின் உதாரணத்தை மேற்கோள் காட்டினார் பிரதமர் மோடி.
மகாபாரதப் போர் 18 நாள்களில் முடிவடைந்தது, அதேபோல் 21 நாள்களில் கரோனா தொற்றுநோய்க்கு எதிரான போரை நாங்கள் வெல்வோம் என்று பிரதமர் கூறினார்.
அந்த 21 நாள்கள் இன்னும் முடிவடையவில்லை என்று நான் நினைக்கிறேன். எனவே, அது குறித்து பேசுங்கள்.
இந்தோ-சீனா எல்லை பிரச்னை, லடாக் கால்வான் பள்ளத்தாக்கு ஆக்கிரமிப்பு குறித்து குறைந்த பட்சமான உண்மைகளையாவது நாட்டிற்குச் சொல்லுங்கள். அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுங்கள் என பிரதமர் நாங்கள் கோருகிறோம். ஆனால், அதற்கும் பதில் இல்லை.
நாட்டை நீங்கள் எப்படி வழிநடத்துகிறீர்கள் என எல்லோரும் நன்கறிவர்" என்றுள்ளார்.
இதையும் படிங்க: 'மேற்கு வங்கத்தில் மண்ணின் மைந்தர்கள் ஆட்சி': பாஜகவை விளாசிய மம்தா பானர்ஜி!