உத்தரப்பிரதேசம் மாநிலம், பெக்கன்கஞ்ச் பகுதியில் சாலையில் முகக்கவசம் இல்லாமல் சுற்றித்திரிந்த ஆடுகளை, காவலர்கள் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆடு கைது செய்யப்பட்டதை அறிந்த உரிமையாளர், உடனடியாக காவல் நிலையத்திற்கு விரைந்து வந்து ஆட்டை விடுவிக்குமாறு கேட்டுள்ளார். கடைசியில் ஆட்டை விடுவிக்க முடிவு செய்த காவலர்கள், இனிமேல் சாலையில் விலங்குகளை சுற்றித்திரிய அனுமதிக்காதீர்கள் என எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து காவலர் சைஃபுதீன் பேக் கூறுகையில், "முகக்கவசம் அணியாமல் ஒரு இளைஞர் ஆடுகளை அழைத்துச் சென்றதை பார்த்தோம். எங்களை பார்த்ததும், ஆடுகளை அங்கேயே விட்டுவிட்டு இளைஞர் ஓடிவிட்டார். எனவே, வேறுவழியின்றி ஆடுகளைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, அதன் உரிமையாளரிடம் எச்சரித்து ஒப்படைத்து விட்டோம்" என்றார்.
மேலும் மற்றொரு காவலர் கூறுகையில், "ஊரடங்கு காலத்தில் வீதியை மீறி, முகக்கவசம் இல்லாமல் ஆடு சுற்றித்திரிந்தது. தற்போது, உரிமையாளர்கள் நாய்களுக்கு முகக்கவசம் அணிவதைப் பார்க்க முடிகிறது. அதே போல், ஆடுகளும் முகக்கவசம் அணியலாமே" என நகைச்சுவையுடன் கேட்டுள்ளார்.
ஆடுகளைக் கைது செய்த சம்பவத்தால், சமூக வலைதளங்களில் கான்பூர் காவல் துறையினர் ட்ரெண்ட் ஆகியுள்ளனர்.