உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று நடைபெற்ற என்கவுன்டரில் காவல்துறையினர் எட்டு பேர் கிரிமினல் கும்பலால் கொல்லப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் கிரிமினல் கும்பலின் முக்கியத் தலைவனான விகாஸ் துபே உள்ளிட்ட 35 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், குற்றவாளி குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அம்மாநிலக் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த என்கவுன்டரில் உயிரிழந்துவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
இந்த என்கவுன்டரில் தேவேந்திர மிஸ்ரா, மூன்று உதவி ஆய்வாளர்கள், நான்கு தலைமைக் காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்கு கடுமையாக கண்டனத்தை தெரிவித்த எதிர்க்கட்சிகள் உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசின் மோசமான நிர்வாகமே காரணம் என விமர்சித்துள்ளனர்.
இதையும் படிங்க: கான்பூர் என்கவுன்டர் : யோகி அரசை சரமாரியாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்