மக்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் தங்களுடைய அன்பை வெளிப்படுத்துகின்றனர். அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள் மீதோ அல்லது நம்முடன் பல ஆண்டுகளாக இருக்கும் பொருள்கள் மீதோ காதல் வருவது இயல்பு. ஆனால், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர், மொழி மீதான காதலால், தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு கன்னடா என பெயர் வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
உடுப்பி மாவட்டத்தில் குண்டாபூர் தாலுகாவைச் சேர்ந்த பிரதாப் ஷெட்டி - பிரதிமா தம்பதியினருக்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இன்ட்டிரியர் டிசைனர் தொழில் செய்துவரும் பிரதாப், தற்போது பெங்களூரில் உள்ள பன்னேர்கட்டாவில் வசித்துவருகிறார். இவர் சில வேலைகளுக்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, அங்கு தமிழ்ச்செல்வி, தமிழரசன் போன்ற பெயர்களை பார்த்து மொழி மீதான காதலை கண்டு வியந்துள்ளார். இதனால் ஈர்க்கப்பட்ட பிரதாப், தனது குழந்தைக்கும் கன்னடா ஷெட்டி என பெயர் சூட்டி மொழி மீதான அன்பை வெளிபடுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் இந்தி மொழி திணிக்கப்பட்டுவரும் சூழலில், தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அசாத்திய காதலும் துணிச்சலும் கொண்ட நபர்கள் இருக்கும் வரை மொழிகளுக்கு அழிவே கிடையாது என பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.