மும்பை: பாகிஸ்தானிகள் ஆக்கிரமித்த காஷ்மீர் போல் மும்பை உள்ளது என கங்கனா கருத்து தெரிவித்தது அரசியல் போராக மாறியிருக்கிறது.
மும்பை பற்றி தவறாக குறிப்பிட்டதற்காக சிவ சேனா கட்சியின் மக்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத், நடிகை கங்கனாவை மும்பைக்கு வர வேண்டாம் என மிரட்டல் விடுத்திருந்தார். இதுகுறித்து கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில், சஞ்சய் ராவத் என்னை மும்பை வரக்கூடாது என வெளிப்படையாகவே மிரட்டல் விடுக்கிறார். மும்பை ஏன் பாகிஸ்தானிகள் ஆக்கிரமித்த காஷ்மீர் போல் இருக்கிறது என இப்போதுதான் புரிகிறது என பதிவிட்டிருந்தார். இந்தக் கருத்து தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த பிரச்னையில் கங்கனாவுக்கு ஆதரவாக பாஜக எம்எல்ஏ ராம் கடம், சிவ சேனா எம்பியிடம் இருந்து வந்திருக்கும் மோசமான கருத்து. மஹாராஷ்டிர அரசு சுஷாந்த் சிங் வழக்கில் நீதி கிடைப்பதை தடுக்கிறது. இதில் தொடர்புடைய பாலிவுட் போதை கும்பல்களை மும்பை போலீஸ் காப்பாற்ற முயற்சி செய்கிறது. இதுபோன்ற மிரட்டலுக்கெல்லாம் கங்கனா போன்ற ஜான்சி ராணி அஞ்சமாட்டார் என குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சச்சின் சாவந்த், மும்பையை தவறாக சித்தரிக்கும் ராம் கடமின் கருத்துக்கு கடுமையான கண்டனங்கள். அவர் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை ஊர்மிளா, இந்தியாவின் அறிவுசார் பண்பாட்டு முகமாக மஹாராஷ்டிரா திகழ்கிறது. இது வீர சிவாஜியின் மண். பல லட்சம் மக்களுக்கு இந்த நிலம் உணவளித்துக் கொண்டிருக்கிறது. நன்றியற்றவர்கள்தான் இதுபோல் பேசுவார்கள் என கங்கனாவை விமர்சித்துள்ளார்.
கங்கனா செப்டம்பர் 9ஆம் தேதி மும்பை வருவதாக சஞ்சய் ராவத்துக்கு சவால் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.