பெற்றோர்களை கவனிப்பதற்கே கவலை தெரிவிக்கும் பிள்ளைகள் வாழும் தற்போதைய காலகட்டத்தில் முதியவர்களுக்கு இலவசமாக உணவளித்து கேரளாவைச் சேர்ந்த உணவகம் ஒன்று அனைவரது மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகேயுள்ள குட்டியடி பகுதியில் பாபு என்பவர் ’கண்டதில்’ என்ற உணவகத்தை நடத்திவருகிறார்.
இந்த பகுதியில் ஒருசில கடைகளும், ஒரு ஹோமியோ மருத்துவமனையும் உள்ளன. அதில் இந்த உணவகமும் ஒன்றாகும். இந்த உணவகத்தில் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது என்பதே இந்த உணவகத்தின் தனிச்சிறப்பாக உள்ளது. அங்கு உணவருந்த வரும் முதியவர்கள் ஒருசிலர் பணம் தர முற்பட்டாலும் அதை வாங்க மறுக்கிறார் இந்த உணவகத்தின் உரிமையாளரான பாபு.
இந்த உணவகத்தை அப்பகுதியில் ஐந்து வருடங்களாக நடத்திவரும் பாபு இதுபோன்று முதியவர்களுக்கு தான் சேவை செய்வதற்கு பல்வேறு காரணங்களை கூறுகிறார். முதியவர்களை சுமையாக கருதும் மனோபாவம் உடைய பிள்ளைகள் இதுபோன்ற மனிதர்களை பார்த்தாலாவது தங்கள் வீட்டிலிருக்கும் வயதான பெரியவர்களை பேணிக் காப்பார்கள் என்று நம்புவோம்.