புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதி மறுசீரமைப்பில் பிரிக்கப்பட்டு 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றிபெற்ற வைத்திலிங்கம் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஏதுவாக தனது சட்டப்பேரவை உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, காலியாகவுள்ள காமராஜ் நகர் தொகுதிக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணியில் கட்சி தலைமை ஈடுபட்டுள்ளது.
முதற்கட்டமாக போட்டியிட விரும்புவோரிடம் இன்று விருப்ப மனு பெறப்படுகிறது. காமராஜர் நகர் தொகுதியில் வெற்றிபெற்று தொகுதியை தக்கவைத்துள்ள முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம் தற்போது எம்.பி.யாக உள்ளார். இவருக்கு செல்வாக்கு மிகுதியாக உள்ளது. அவர் முடிவு செய்யும் வேட்பாளரை களமிறக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.
இந்தத் தொகுதியை பெறுவதற்கு புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம் தனது ஆதரவாளரான தொழிலதிபர் ஜெயக்குமாரை களமிறக்க ஆலோசித்துவருகிறார். அதேசமயத்தில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தனது தொகுதியை விட்டுக்கொடுத்த ஜான் குமாருக்கு இத்தொகுதியை ஒதுக்கலாம் என முதலமைச்சர் நாராயணசாமியும் தற்போது ஆலோசித்துவருவதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
அப்படி செய்தால்தான், நெல்லித்தோப்பு தொகுதியை தனது நிரந்தர தொகுதியாக மாற்றிக்கொண்டு ஜான் குமாருக்கு காமராஜ் நகர் தொகுதியை ஒதுக்கலாம் என்பது முதலமைச்சரின் கணக்காம். இது தொடர்பாக நெல்லித்தோப்பு தொகுதி முக்கிய நிர்வாகிகளிடம் அவர் ஆலோசித்துள்ளதாகவும், மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் பேசியதாகவும் தெரிகிறது.
எனவே, காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடுவதற்கு மாநில தலைவர் நமச்சிவாயம் ஆதரவாளர் தேர்வு செய்யப்படுவாரா அல்லது முதலமைச்சர் ஆதரவாளர் இத்தொகுதியில் களமிறக்கப்படுவாரா என காங்கிரஸ் வட்டாரத்தில் உச்சகட்ட பரபரப்பு எழுந்துள்ளது.