மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியிலிருந்து அண்மையில் விலகினார். இதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களாக இருந்த ஆறு அமைச்சர்கள் உள்பட 22 சட்டப்பேரவை உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர். இதனால் அம்மாநிலத்தில் நடைபெற்று வந்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.
காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை குறைந்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பே தன்னுடைய ராஜினாமா கடிதத்தை, ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் கமல்நாத் வழங்கினார். இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச முதலமைச்சராக பாஜக சார்பில் சிவராஜ் சிங் சவுகான் இன்று இரவு 9 மணியளவில் பதவியேற்கிறார்.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் நடந்த அரசியல் களேபரங்கள் குறித்தும், மாநிலங்களவைத் தேர்தல் குறித்தும் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை கமல்நாத் இன்று சந்தித்துப் பேசினார். மேலும் மாநிலத்தில் நிலவும் கரோனா பாதிப்புகள் குறித்தும் கமல்நாத்திடம் சோனியா காந்தி கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
22 காங்கிரஸ் உறுப்பினர்கள் விலகியதையடுத்து அம்மாநில சட்டப்பேரவையில் அக்கட்சியின் பலம் 92 ஆக குறைந்துள்ளது. பாஜகவின் பலம் 106ஆக உள்ளது. தற்போது இருக்கும் சூழலில் மாநிலங்களவையில் இரண்டு இடங்களையும் வெல்வது காங்கிரஸ் கட்சிக்கு சவாலான காரியமாகும்.
முன்னதாக மாநிலங்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில் திக் விஜய் சிங்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் பூல் சிங் பரையாவும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ம. பி. முதலமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் இன்று பதவியேற்பு