தெலங்கானா ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் திஷா, நான்கு பேரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். அவரின் உடலும் தீயிட்டு எரிக்கப்பட்டது.
நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தவழக்கில், குற்றவாளிகள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு காவலர்களால் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். குற்றவாளிகள் நால்வரும் காவலர்களிடம் இருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டு தப்பிச்செல்ல முயன்றதாகவும், அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர்கள் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போலீஸ் என்கவுன்டரை எதிர்த்து ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாநில அரசு சார்பில் 8 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஜி.எஸ். மணி என்பவர் திஷா என்கவுன்டர் தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “திஷா என்கவுன்டர் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று” என தெரிவித்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் மாநில அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி வாதாடினார்.
காவலர்கள் நடத்திய விசாரணையின்போது குற்றவாளிகள் போலீசாரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தெலங்கானா என்கவுன்டர்: ஆளுங்கட்சி பெண் எம்எல்ஏ பேச்சால் சலசலப்பு!