உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த செய்தியாளர் விக்ரம் ஜோஷி அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தலையில் துப்பாகியால் சுடப்பட்டதால் உயிருக்குப் போராடிய விக்ரம் இன்று (ஜூலை 22) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ஜூலை 20ஆம் தேதி காசியாபாத் பகுதியில் அவரது வீட்டருகே நடந்து கொண்டிருந்த விக்ரம் ஜோஷி மீது அடையாளம் தெரியாத நபர்கள் கோர தாக்குதல் நடத்தினர். பொது வெளியில் நடைபெற்ற இந்தத் தாக்குதல் சிசிடிவில் தெளிவாகப் பதிவாகியது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.
முன்னதாக, விக்ரம் ஜோஷியின் உறவுக்காரப் பெண்ணை சிலர் சீண்டிவந்த நிலையில் அவர்கள் மீது விக்ரம் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து விக்ரமை பழிவாங்கவே இந்த கோரச் செயல் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
செய்தியாளர் விக்ரம் ஜோஷியின் மறைவுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப் பிரதேச அரசு சட்டம் ஒழுங்கை முறையாக பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: வாணியம்பாடியில் சிறுமி பலாத்காரம்: போக்சோவில் சிறுவன் கைது!