இது தொடர்பாக ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி 2019 ஆண்டுக்கான எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு வரும் ஜூன் 2ஆம் தேதி காலை, மதியம் என இரண்டு வேளைகளிலும் நடைபெற உள்ளது. 200 இடங்களுக்கான நுழைவுத் தேர்வில் 150 இடங்கள் ஜிப்மர் புதுச்சேரிக்கும், 50 இடங்கள் ஜிப்மர் காரைக்காலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 1,84,272 மாணவர்கள் பங்கு பெறும் இந்த தேர்வில் காலை வேளையில் 94073 மாணவர்களும், மதிய வேலையில் 90199 மாணவர்களும் பங்கு பெறுகின்றனர். இந்த தேர்வுகள் காலை 10 மணி முதல் 12. 30 மணி வரையும் பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெற உள்ளது.
காலை 9.30 மணிக்கு மேல், பிற்பகல் 2.30 மணிக்கு மேல் தாமதமாக வரும் மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும். புதுவையில் உள்ள 7 மையங்களில் 2279 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். மாணவர்கள் நுழைவு சீட்டு, உரிய அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். இல்லையெனில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தொலைபேசிகள், கால்குலேட்டர்கள், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு கருவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. ஊனமுற்றோருக்காக தரைத்தளத்தில் தேர்வு எழுத வசதி செய்யப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் ஜூன் 21ம் தேதிக்குள் அறிவிக்கப்படும்.முதல் கலந்தாய்வு ஜூன் 2019 இறுதி வாரத்தில் நடைபெற உள்ளது வகுப்புகள் ஜூலை முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. கூடுதல் தகவலுக்கு www.jipmer.edu.in எனும் இணையதளத்தை பார்வையிடவும், என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.