புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் துப்புரவு பணி, காவலாளி பணி உள்ளிட்ட பணிகள் தனியார் ஒப்பந்ததாரரிடம் விடப்பட்டுள்ளது. இதில் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 6,000 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூபாய் 12 ஆயிரத்துக்கு மேல் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இங்கு பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்கள், டி பிரிவு ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் இன்று காலை ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஜிப்மர் மருத்துவமனை பணிகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோரிமேடு காவல் துறையினர், பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.